கல்வித்துறை, மாணவ மாணவியர்களுக்கு ஆட்சியர் சரயு பாராட்டு
10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 25 - வது இடத்திற்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 13,006 மாணவர்கள் மற்றும் 12,612 மாணவிகள் என மொத்தம் 25,618 மாணவ, மாணவிகளும், 556 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 91.43 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 25 -வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 85.36 சதவிகிதம் பெற்று 37 இடத்திலிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் இந்த வருடம் தேர்ச்சி விகிதத்தில் 25 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மாநில அளவில் 22-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த கல்வி ஆண்டில் 12- வகுப்பு பொது தேர்வு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 197 பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் 20,156 மாணவ, மாணவிகள் 85 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 91.87 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 3 சதவிகிதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு 12 -ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு ஆகிய பொது தேர்வுகளில் 37 -வது இடத்திலிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு 12 -ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக இருந்த 25 பள்ளிகளும், 10 -ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக இருந்த 50 பள்ளிகளை தேர்ந்தெடுத்து ((Focus 25 Schools and Aspirant 50 Schools) என இரண்டு வகைகளாக பிரித்து தனி கவனம் செலுத்திட சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலமாக பள்ளி மாணவ மாணவியாக் ளுக்கு ஆகஸ்டு மாதம் முதல் காலை 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது, சிறப்பு பயிற்சிகள் மற்றும் திருப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பள்ளியிலும் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதன் பயனாக கடந்த ஆண்டை விட 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. மேலும், 66 அரசுப்பள்ளிகளும், 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தங்களின் பங்களிப்பினை வழங்கிய அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.