சென்னைக்கு நிவாரண பொருட்கள் - ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

சென்னை திருவொற்றியூருக்கும் மணலிக்கும் நிவாரண பொருட்கள் - ஆட்சியர் உமா அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த நான்கு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர நிவாரண பொருட்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15-க்குட்பட்ட (புழுதிவாக்கம்) பகுதிகளுக்கு பல்வேறு நிவாரண பொருட்கள் திருவொற்றியூருக்கும், மணலிக்கும் 10 கனரக வாகனங்களில் தேவையான ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story