ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு !

ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு !

கலெக்டர் ஆய்வு

ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று பார்வையிட்டார். ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம் ஊராட்சியில் பழங்குடியினர் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை நல்ல தரத்துடன் விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அருகில் இருந்த கலைக்கூத்தாடிகள் இன மக்கள் 9 குடும்பம் இங்கு தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கும் வசிக்க வீடு இல்லாததால் வீடு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர், உடனடியாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவர்களை பயனாளிகளாக எடுத்துக்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் 9 நபர்களுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பின்னர் ஆலத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், காரை கிராமத்தில் தொல்லுயிர் பூங்காவில் கம்பி வேலிகள் அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம் ஊராட்சியில் பழங்குடியினர் இருளர் வகுப்பைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு பி.எம்.ஜன்மான் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 லட்சம் வீதம் ரூ.25.35 மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 44 புதிய குளங்கள் அமைத்திட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜல்ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் ரூ.10.72 கோடி மதிப்பீட்டில் 39 பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டன. அவற்றுள் 14 பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 25 பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் ரூ.1.60கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், காரை கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி ரூ.7.89 கோடி மதிப்பில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியுடன் தொல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவுறும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story