சிறுவாச்சூர் மேம்பாலத்தில் ஆட்சியர் ஆய்வு
சிறுவாச்சூரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 12 மீட்டர் அகலம் மற்றும் 5.50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மேம்பாலத்தின் உறுதித்தன்மையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பாலம் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, தனது வாகனத்தில் மூன்று முறைகள் பாலத்தில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். அவ்வாறு பாலத்தில் சென்றபோது பாலத்தின் ஒருசில இடங்களில் சிறு மேடு பள்ளங்களால் வாகனத்தில் அதிர்வு ஏற்படுவதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் , இதுபோன்ற அதிர்வுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவார்கள் எனவே, பாலத்தில் அதிக அதிர்வு ஏற்படுத்தும் இடங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.
மேலும், பாலத்தின் நடுவே தடுப்புகள், உயரமாக அமைக்க வேண்டும் என்றும், பாலத்தில் விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பாலத்தில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து பாலத்தின் தன்மை குறித்த உறுதித் தரச்சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, திருச்சி டோல்வே லிமிடெட் திட்ட மேலாளர் துர்கா பிரசாத் ரெட்டி, சிவில் மேலாளர் சிவசங்கரன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.