நாமக்கல்லில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, தோக்கம்பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, மாற்றுத்திறனாளி செல்வராஜ் அவர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளி செல்வராஜ் நடக்க முடியாத சூழ்நிலையில் மாற்றுத்திறனாளியாகவும், தனது வயது முதிர்ந்த தந்தையுடன் (80) சிறிய குடிசையில் அவர்களின் சொந்த இடத்தில் வசித்து வந்தார். தொடர்புடைய மாற்றுத்திறனாளியின் நிலையை அறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அவர்களுக்கு கையால் இயக்க கூடிய மூன்று சக்கர சைக்கிள், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா நகல், மாத உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வந்த நிலையில் கூடுதலாக ரூ.1,000/- என மொத்தம் ரூ.3,000/- உதவித்தொகை பெற ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
மேலும், அவர்களது சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை (08.02.2024) அன்று வழங்கபட்டு, சமூக பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்) ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று மாற்றுத்திறனாளி செல்வராஜ் அவர்களுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டு, தற்போது பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, நாமக்கல் நகராட்சி உழவர் சந்தையில் மழைநீர் தேக்காத வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை சீர் செய்யும் பணிகளை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், முல்லை நகரில் பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு, நூலகத்திற்கு தினசரி வருவதை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து, தொடர்ந்து முறையாக பராமரித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, உத்தரவிட்டார்.