சிறப்பு முகாம்களில் ஆட்சியர் நேரில் சென்று பார்வை
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ததையொட்டி, நீர்நிலைகள், கால்வாய்களில் அதிகளவு தண்ணீரால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வாறு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் உள்ள மழை நீர் காட்டு நாயக்கர் காலனி குடியிருப்பு பகுதியில் புகுந்ததால், அங்கிருந்த 65 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு எஸ்.டி.ஆர்.என் மேல்நிலைப் பள்ளி வெள்ள நிவாரண சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவுகள், உடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் இலவச வீட்டுமனைப்பட்டா, சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். பின்னர் கட்டங்குடி ஊராட்சி, கோவிலாங்குளம் ஒட்டக்குளம் கண்மாய் உடைந்து கட்டங்குடி கண்மாய்க்கு தண்ணீர் வரப்பெற்றதால், தாழ்வான பகுதியான ஆதிதிராவிடர் காலணி குடியிருப்பு பகுதிக்கு, தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் 55 பேர் மீட்கப்பட்டு, கட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதி மக்களின் சாலை வசதி, வாறுகால் மற்றும் பேவர் பிளாக் அமைப்பதற்கான கோரிக்கைகளையும், சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கவும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.