வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை துவக்கி வைத்த ஆட்சியர்
விருதுநகர் சூலக்கரை அங்கன்வாடி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற, வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் -A வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் வைட்டமின் - A சிரப், துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தொடங்கி வைத்தார்.
மேலும், ஓ.ஆர்.எஸ் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் துத்தநாக மாத்திரை உட்கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். மாவட்டத்தில் வயிற்று போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை தடுக்க, வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், 6-க்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும். மேலும் தாய்ப்பாலின் மேன்மை, ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை வழங்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும். இம்முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக 6 வயதிற்குட்பட்ட 1,28,267 குழந்தைகள் பயனடைய உள்ளார்கள்.