விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கிய ஆட்சியர்

விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையிலான பழசெடி தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் 10 விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் பசுந்தாள் உர விதைகளான தக்கைப்பூண்டு விதைகளையும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறையின் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.1200/- மானிய விலையிலான பழசெடி தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விவசாயிகளுக்கு வழங்கினார்.

வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.35 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 70000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன.

எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும்.

இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர்கள்”. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இன்று வேளாண்மைத்துறையின் மூலம் 10 விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் பசுந்தாள் உர விதைகளான தக்கைப்பூண்டு விதைகளையும், தோட்டக்கலை துறை மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.1200/- மானிய விலையிலான கொய்யா, மா, எலுமிச்சை, நெல்லி மற்றும் சீதா உள்ளிட்ட பழசெடி தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதைகள் முழு விலை ரூ.2000/- மானியம் ரூ.1000/- 50-/- சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

Tags

Next Story