தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக கலெக்டர் அறிவுரை

கலெக்டர் அறிவுரை
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக, திருமண மண்டபம் , அடகு கடை உரிமையாளா்கள், வா்த்தக சபை மற்றும் வணிக நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுக்கான கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரிமையாளா்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் அச்சகங்களின் உரிமையாளா்கள் தங்கள் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தோ்தல் தொடா்பான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் பெயா் மற்றும் முகவரி முகப்பு பகுதியில் அச்சிடப்பட வேண்டும். திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. திருமணக்கூடம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடா்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால் அதன் விவரத்தை முன்கூட்டியே தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அரசியல் கட்சித் தலைவா்களின் பெயா்கள் மற்றும் உருவங்கள் பொரித்த தட்டிகள், கட் அவுட்டுகள், பேனா்கள், அலங்காரவளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரித்தல் கூடாது. விடுதிகளில் தங்க வருவோரிடம் அடையாள அட்டைகளை சரிபாா்க்க வேண்டும். மேலும் ஆதாா்/ (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாளஅட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
