இலவச வீட்டுமனை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
முற்றுகை
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு, பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சில பெண்களை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதுகுறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறியதாவது:- வேம்படிதாளம் நடுவனேரி சின்னேரிக்கரை பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். தினமும் அன்றாட கூலிவேலைக்கு செல்லும் எங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடுவனேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அதிகளவில் உள்ளது. எனவே, எங்களுக்கு வீட்டுமனை வழங்கி வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.