சாலையில் அணிவகுக்கும் கல்லுாரி பஸ்கள் - ராமாபுரத்தில் தினமும் நெரிசலால் அவதி
கல்லுாரி பஸ்கள்
சென்னை ராமாபுரம் பாரதி சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில், ஒரே நேரத்தில் கல்லுாரி பேருந்துகள் வரிசை கட்டி நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரத்தில், நெசப்பாக்கம் -- சின்ன போரூர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, பாரதி சாலை உள்ளது. நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில் காவல் நிலையம், தனியார் கல்லுாரி ஆகியவை அமைந்துள்ளதால், எந்நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும். ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், பாரதி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும், இங்குள்ள தனியார் கல்லுாரிக்கு வரும் மாணவர்கள், தங்கள் பைக்குகளை சாலையோரம் நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் மாலை நேரங்களில் ஒரே நேரத்தில் கல்லுாரியில் இருந்து பல பேருந்துகள் வெளியே வந்து, சாலையில் வரிசை கட்டி நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பாரதி சாலை, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை சந்திப்பை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் கல்லுாரி நிர்வாகத்துடன் இணைந்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.