தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.
காவல் நிலையம்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ஆவுடையார்பாறை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் நந்தகுமார் வயது 22. இவர் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் செல்வம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் நொய்யல் குறுக்கு சாலை அருகே வந்தபோது, ஈரோடு மாவட்டம், சிவகிரி, வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் மகேஷ்குமார் வயது 36 என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து, நந்தகுமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தலை மற்றும் முன் நெற்றியில் பலத்த காயம் அடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த நந்தகுமாரின் தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த நந்தகுமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.