கல்லூரி ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: 143 பேர் கைது

கல்லூரி ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: 143 பேர் கைது
கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்
தஞ்சாவூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய கல்லூரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகேயுள்ள கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 143 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு, பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி எம்.பில்., பி.எச்.டி. பட்டங்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

புத்தொளி, புத்தாக்க பயிற்சிகளுக்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணி நிலையில் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டுக்கு முனைவர் பட்டம் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்மொழித் தேர்வு தேர்ச்சியை ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு குழுவின் மாநிலப் பொதுச் செயலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சேவியர் செல்வகுமார், தஞ்சாவூர் மண்டலப் பொதுச் செயலர் பிரகாஷ்ராஜ், செயலர் மகேந்திரன், பொருளாளர் ரமேஷ் உள்பட தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற 143 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story