தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி துவக்கம்
தபால் வாக்கு பதிவு செய்யும் மூதாட்டி
பாராளுமன்ற தேர்தலில் 85 வயது நிரம்பிய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறு தபால் வாக்குகள் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதனுடன் சேர்த்து நோட்டாவும் உள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 85 வயது நிரம்பிய முதியவர்கள் 164 பேர் மற்றும் 112 மாற்றுத் திறனாளிகள் என 276 பேர் தபால் வாக்கு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று முதல் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் 6 குழுக்களை நியமித்துள்ளது. இந்த ஆறு குழுக்களும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து சென்று தபால் வாக்கு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் தபால் வாக்கு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நபரின் பெயர் மற்றும் முகவரி இதர தகவல்களை நிரப்பி தபால் வாக்கு பதிவு செய்ய உள்ள நபரின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தனர். அதனைத் தொடர்ந்து முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மறைவாக உள்ள அட்டைப்பெட்டியின் பின்புறம் வைத்து வாக்கு சீட்டில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டியில் வாக்கு சீட்டு மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் அடங்கிய உரை போடப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.