காஞ்சிபுரம் தேரோடும் வீதியில் புதைவட மின் பாதை அமைக்கும் பணி துவக்கம்


காஞ்சிபுரம் தேரோடும் வீதியில் புதைவட மின் பாதை அமைக்கும் பணி துவங்கியது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற திருக்கோயில்களும் பல்வேறு பரிகார தலங்களும் அமைந்துள்ளன. இதனை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். மேலும் காஞ்சிபுரம் நகரில் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் 250க்கும் மேற்பட்ட நாட்களில் காஞ்சிபுரம் நகர வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
குறிப்பாக வரதராஜ பெருமாள் , ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் உள்ளிட்ட திருக்கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் 10 நாட்களும் சாமி வீதி உலா மற்றும் வெள்ளி, தங்க மற்றும் மரத் தேர்கள் என நான்கு ராஜ வீதிகளிலும் உலா வரும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். இந்நிலையில் இது போன்ற காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
இதனைப் போக்கும் வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , கடந்த ஐந்தாண்டுகளாக தேரோடும் காஞ்சிபுரம் நகர வீதிகளில் புதை வட மின்பாதை அமைக்க கோரிக்கை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் முக்கிய 10 கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதில் கோரிக்கையும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் தற்போது அதற்கான திட்டம் மதிப்பீடான ரூபாய் 5.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2.639 கிலோமீட்டர் தூரம் இந்த பணி நடைபெற உள்ளது.
இன்று இதனை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கச்சபேஸ்வரர் கோயில் அருகே துவக்கி வைத்தார். இதுகுறித்து எம்எல்ஏ கூறுகையில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது காஞ்சி நகர மக்களுக்கு மட்டுமல்லாது இங்கு வருகை தரும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இத்திட்டத்தில் குறிப்பிட்டபடி அனைத்து பகுதிகளிலும் ஒரு மாத காலத்தில் இதனை அமைக்கும் பணி முடிவு பெறும் எனவும், இந்தப் பாதையில் கழிவு நீர் மற்றும் குடிநீர் பாதைகளும் செல்வதால் மாநகராட்சியின் பொறியாளர் ஒருவரை இப்பணி முடியும் வரை இதில் இணைத்து பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி இப்பணி நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், தி.மு.க. மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மின்வாரிய பொறியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


