கமிஷன் பிரச்சனை - நிலபுரோக்கரை தாக்கிய ஒன்றியக்குழு தலைவர் கணவர் கைது

கமிஷன் பிரச்சனை - நிலபுரோக்கரை தாக்கிய ஒன்றியக்குழு தலைவர் கணவர் கைது

பாலமுருகன்

கெங்கவல்லி வட்டம் தம்மம் பட்டி அருகே நிலம் விற்பனை செய்ததில், கமிஷன் தொடர்பான தகராறில் நில புரோக்கரை தாக்கிய கெங்கவல்லி ஒன்றியக் குழு தலைவரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக்குழு தவைவர் ப்ரியா. இவரது கணவர் பாலமுருகன் (36). இவர் தம்மம்பட்டி -ஆத்தூர் நெடுஞ்சாலையில் நாகியம்பட்டி பிரிவு சாலையை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். நிலம் விற்பனையில் நாகியம்பட்டியை சேர்ந்த நில புரோக்கர் பெரியசாமி என்பவர் ரூ.2.65 கோடிக்கு விலை பேசி நிலத்தை விற்பனை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலம் வாங்கி கொடுத்தது சம்பந்தமாக நிலபுரோக்கர் பெரியசாமி,தனக்கு வரவேண்டிய 2சதவீத கமிஷன் தொகையான ரூ.5.30 லட்சத்தை பாலமுருகனிடம் கேட்டுள்ளார். இது சம்பந்தமாக பாலமுருகனுக்கும், நில புரோக்கர் பெரியசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரியசாமி கடந்த 25ம் தேதி பாலமுருகனிடம் தனக்கு வரவேண்டிய கமிஷன் தொகையை தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பாலமுருகன், பெரியசாமியை கல்லால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெரியசாமி சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் பெரியசாமி தம்மம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒன்றியக்குழு தலைவர் ப்ரியாவின் கணவர் பாலமுருகனை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் வாங்கியதில், கமிஷன் கொடுக்காமல் நிலபுரோக்கரை ஒன்றியக்குழு தலைவரின் கணவர் தாக்கிய சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story