பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியதால் பரபரப்பு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே 16 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியதால் பரபரப்பு
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே 16 நாட்டு வெடிகுண்டுகள் பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் நகரின் முக்கிய இடமான புதிய பேருந்து நிலையம் எதிரே இலங்கை அகதிகள் முகாமிற்கு மிக அருகில் டிராவலிங் பேக் ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்து பார்த்த பொழுது அதன் நிறைய நாட்டு வெடிகுண்டு போன்ற பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பையில் இருந்தது வெடிபொருள் என தெரிய வந்தது மேலும் அந்த பை அருகே யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதோடு அந்தப் பையை அங்கு வைத்து விட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இந்த வெடி பொருளை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட க்யூ பிரிவு போலீசார் இது நாட்டு வெடிகுண்டு என்றும் இதில் திரியில் நெருப்பை வைத்து தூக்கி வீசினால் வெடிக்கும் என்றும் மேலும் இதனை தரையிலோ அல்லது சுவற்றில் ஓங்கி அடித்தாலும் வெடிக்கும் தன்மையுடையது என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் தன்மையை குறித்து கண்டறிவதற்காக திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். அவர்கள் வந்து இதனை சோதனை செய்து பிறகே இது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு வகையான வெடி பொருளா என்பதும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர், இதைத் தொடர்ந்து பையில் இருந்த வெடி பொருட்களை பாதுகாப்பாக வெடிபொருட்கள் ஏற்றி செல்லும் வாகனத்தின் மூலம் வெடிகுண்டு பையை ஏற்றி சிறுவாச்சூர் அருகே உள்ள வெடி மருந்து கிடங்கில் பத்திரமாக வைத்தனர். அதிகமான பொதுமக்கள் நடமாடக்கூடிய நகரின் மையப் பகுதியில் வெடிகுண்டு பை கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வணிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இச்சம்பவத்தினால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story