வறட்சி பாதிப்பிற்கு இழப்பீடு - தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வறட்சி பாதிப்பிற்கு இழப்பீடு - தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. மாநில குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக வறட்சி மற்றும் வெள்ளை நோய் பாதிப்பு காரணமாக காய்ப்பு திறன் குறைந்து அடி முதல் குருத்து வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கீடு செய்து மரம் ஒன்று இருக்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கும் மற்றும் சத்துணவு மையம் பள்ளிகள் கல்லூரிகளுக்கும் அரசு மானியத்தில் வழங்கி விலை வீழ்ச்சியை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கொப்பரை தேங்காய் ஆண்டு முழுவதும் அரசியல் கொள்முதல் செய்யவும் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 140 வழங்கிடவும் அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தென்னை மரத்திற்கும் விவசாயிக்கும் அரசு இன்சூரன்ஸ் வழங்கிட வேண்டும் மற்றும் தேங்காய் வியாபாரிகள் தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது லாபக்காய் எடுக்கும் முறையை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் அரசு முழு தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 க்கு மார்க்கெட்டிங் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சாமி நடராஜன் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் அதன்படி மத்திய மாநில அரசுகள் தங்களின் கோரிக்கையை ஏற்று உரிய நஷ்டஈடு வழங்காவிட்டால் வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story