தமிழகத்தில் 3 தொகுதிகளில் போட்டி: பாரிவேந்தா்

தமிழகத்தில் 3 தொகுதிகளில் போட்டி: பாரிவேந்தா்

செய்தியாளர் சந்திப்பு 

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் தமிழகத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும், பெரம்பலூா் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆா்.எம் விடுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும், பெரம்பலூா் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது : இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு தேசியக் கட்சி. மற்றுமொரு தேசியக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் ஐஜேகே களமிறங்கவுள்ளது. இதில், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம்.

பாஜகவினரும் உறுதியளித்துள்ளதால் அவற்றில் போட்டியிட வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் எங்களை கூட்டணிக்கு வருமாறு அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் அழைத்து வருகின்றனா். ஆனால் பாஜக வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா். கூட்டத்துக்கு, கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தாா்.

பொதுச் செயலா் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் பொறுப்பாளா்கள் மற்றும் கட்சியின் அனைத்து அணிகளை சாா்ந்த பொறுப்பாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கூட்டத்தில், தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சீரமைப்புப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். மத்திய பாஜக அரசு கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நெய்வேலியில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story