நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி - பாஜக நிர்வாகி மீது புகார்
சேலம் மாவட்டம் குளத்தூர் வட்டம் நீதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. இவர் பாஜகவின் பாஜக ஒபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கோவையை தலைமையிடமாக கொண்டு சோழா அண்ட் சோழா சிட் பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் சிவகாசி பேருந்து நிலையம் அருகே புதிய கிளை அலுவலகத்தை துவக்கியுள்ளார்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் வகையில் 1லட்சம் முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சீட்டு பிடித்துள்ளார். அதிக லாபம் கிடைப்பதாக நம்பிய சிவகாசி பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கடந்த 10 மாதங்களாக கட்டிய சுமார் 3 கோடி ரூபாயுடன் திடீரென மணிகண்ட பிரபு மாயமானார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து பயனாளிகள் அவரது பிரதான நிறுவனங்களான கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் அவரது சொந்த ஊரிலும் சென்று அவரை தேடி உள்ளனர் ஆனால் அங்குள்ள நிறுவனங்களும் அவரது வீடும் பூட்டி கிடந்ததை கண்டு செய்வதறியாது தவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பணத்துடன் தலைமறைவானதை உறுதி செய்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்களது பணத்தை மீட்டு தரக் கோரியும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா உறுதி அளித்துள்ளார். பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதையும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளிடம் நெருக்கமாக இருப்பதையும் தனது வாடிக்கையாளர்களிடம் காட்டிக்கொண்டு தன்னை நம்பி முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது