வேலை வாங்கி தருவதாக பண மோசடி-கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்
ஆட்சியர் அலுவலகம்
கோவை: கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் லோகநாயகி.இவர் இதற்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், 2021ம் ஆண்டு லோகநாயகி திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது அவரும் அவரது மகன் எழில் பிரபாகரன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தற்போது வரை வேலைக்கும் அனுப்பாமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறினார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவர்கள் திடீரென கிளம்பி கோவைக்கு வந்து விட்டதால் பல நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் ஒருவழியாக லோகநாயகி கோவையில் பணிபுரிவதை தெரிந்து கொண்டு இங்கு வந்ததாகவும் அவரிடம் தான் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் தர மறுத்ததாக கூறினார். பின்னர் இது பற்றி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் கவுண்டம்பாளையம் போலிசார் லோகநாயகி கிராம நிர்வாக அலுவலராக இருப்பதால் இது குறித்து தாங்கள் விசாரணை நடத்த முடியாது என கூறி விட்டதாக தெரிவித்தார்.3 வருடங்களுக்கும் மேலாக தனது பணத்தை பெறுவதற்கு போராடி வருவதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியராவது லோகநாயகியிடம் இருந்து தனது பணத்தை பெற்று தந்து அவர் மீதும் அவரது மகன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.