ஒன்றிய குழு தலைவர் மீது கவுன்சிலர்கள் புகார் - விளக்க நோட்டீஸ்
ஒன்றியக்குழு தலைவருக்கு நோட்டீஸ்
கெங்கவல்லி ஒன்றியத்தில், தி.மு.க.,வில், 7 பேர், அ.தி.மு.க.,வில், 4 பேர் என, 11 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பிரியா, ஒன்றிய குழு தலைவராக உள்ளார். அவர் ஆட்சி மாற்றத்துக்கு பின், தி.மு.கவில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் விஜேந்திரன் தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள்,5 பேர், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 4 பேர், பிரியா மீது முறைகேடு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கடந்த அக்டோபரில், கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்தனர்.இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஆத்துார் ஆர்.டி.ஒ., ரமேஷூக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் நாகியம்பட்டியில் உள்ள, பிரியாவின் வீட்டுக்கு கெங்கவல்லி துணை பி.டி.ஓ., கோவிந்தராஜ், வருவாய்த்துறை, போலீசாருடன், 'நோட்டீஸ்' வழங்க சென்றார். ஆனால், அவர் வீட்டில் இல்லை. இதனால் வீட்டு கதவில், கோவிந்தராஜ், 'நோட்டீஸ்' ஒட்டினார்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறையினர் கூறுகையில், 'புகார் குறித்து ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 15 நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்க, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். இதற்கான 'நோட்டீஸ்', பிரியா வீட்டின் கதவில் ஒட்டப்பட்டுள்ளது' என்றனர்.