சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் புகார் அளிக்கலாம்

மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில் பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில், சுமார் 1098 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் சுமார் 3000 பட்டாசு கடைகள் என மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழில் தொடர்பான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்த்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெடி மருந்துகள் கையாளுதல் தொடர்பாக, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் பயிற்சி மையத்தில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முதல் முறை கட்டணமின்றியும், முதல்முறை கலந்து கொள்ளாத பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இரண்டாம் முறை கலந்து கொள்ள ரூ.5,000/- அபராதமாக செலுத்தவும், மேலும் இரண்டாம் முறை கலந்து கொள்ளாமல் மூன்றாம் முறை பயிற்சியில் கலந்து கொள்ளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000/- அபராதம் செலுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டு, மேற்படி முதல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 57 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.5000/-வீதம், இதுவரை சுமார் ரூ.2,85,000/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று முறையிலும் பயிற்சிகள் பெறாமல் தவிர்த்த பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் வாயிலாக ஜனவரி-2024 முதல் மே 2024 வரையிலான காலத்தில், பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மொத்தம் 1977 நபர்களுக்கும், போர்மேன்கள்/ சூப்பிரவைசர்கள் மொத்தம் 428 நபர்களுக்கும் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சுமார் 30 நபர்களுக்கும் என ஆகமொத்தம் 2435 நபர்களுக்கு இதுநாள் வரையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், வெடிபொருள் சட்ட விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அவர்களால் நான்கு சிறப்பு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேற்படி சிறப்பு ஆய்வுக்குழுக்களால் இவ்வாண்டில் மட்டும் இதுநாள் வரையிலும் சுமார் 504 பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு, அதில், 102 பட்டாசு தொழிற்சாலைகளின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யவும், நிரந்தரமாக இரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், மாண்பமை உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்திகள் மேற்கொள்ளும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்திட பட்டாசு தொழிற்சாலைகள் சிறப்பு ஆய்வுக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமம் பெற்ற நபர்களால் நடத்தப்படாமல், வேறு நபர்களுக்கு உள்வாடகை மற்றும் உள் குத்தகைக்கு விடப்படுவதாகவும், அதனால் வெடி விபத்துக்கள் ஏற்படுவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வரப்பெறுகின்றன. உரிமம் பெற்ற நபர்கள் சட்ட விதிமுறைகளை மீறி, பிற நபர்களுக்கு உள்வாடகை மற்றும் உள் குத்தகைக்கு விடுவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு புறம்பாக உள் குத்தகை, உள் வாடகை விடுதல் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில்; பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழில் நல அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் எண். 94439 67578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story