சிட்பண்ட் நடத்தி ரூ.26.83 லட்சம் மோசடி புகார்
கைதானவர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஏபிஆர் சிட்பண்ட் நிறுவனத்தினர் தீபாவளி சீட்டு நடத்தி பரிசு பொருட்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் செய்யாறு சிட்பண்ட் நிறுவன தலைமை அலுவலகத்தில் புகுந்த 300க்கும் மேற்பட்டோர் சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, அலமாரிகள், டிவி, இன்வெர்ட்டர் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை அள்ளி சென்றனர். பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் சாலை மறியலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வானூர் தாலுகா அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிட்பண்ட் நிறுவன ஏஜென்ட் வசந்தமேரி(39) செய்யாறு போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். புகாரில் சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் அல்தாப் தாசிப் (35), தீபாவளி மளிகை பொருட்கள் தருவதாக கூறியதால் கடந்த ஓராண்டாக பணம் கட்டி வந்ததாகவும்.
அதன்படி இதுவரை ரூ.26 லட்சத்து 83 ஆயிரத்து 800ஐ கட்டியுள்ள நிலையில், முதிர்வுக்கு பின்னரும் பணமோ பொருட்களோ திரும்ப தரவில்லை. பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் அல்தாப் தாசிப்பை நேற்று கைது செய்தனர். நிறுவன மேலாளரான கமலக்கண்ணனும் (45) கைது செய்யப்பட்டார்.