பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

காரிமங்கலம் அருகே முறையான குடிநீர் வழங்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அடுத்த இண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள இண்டமங்கலம் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கிராமத்தில் முறையான குடிநீர் வருவதில்லை. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கூட, இந்த கிராமத்திற்கு வருவதில்லை.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக வேண்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் சீராம்பட்டியில் உள்ள ஒகேனக்கல் தண்ணீர் செல்லும் குழாயில் வழிந்து ஓடும் தண்ணீரை பிடிக்கும் இடத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வரவேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் கிராமமக்கள் கூலி வேலை செய்து வருவதாலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதால், குடிநீர் தேடி அலைந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.இது சம்மந்தமாக நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடமும், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் கிராமமக்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்பொழுது அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

Tags

Next Story