திமுக, விசிகவினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் - பாரிவேந்தர்
பாரிவேந்தர் செய்தியாளர் சந்திப்பு
பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, ஓட்டு கேட்டு தேர்தல் பணியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் கந்தசாமி மற்றும் லட்சுமணன் ஆகியோரை அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த, கந்தசாமி லட்சுமணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர், பாரதிய ஜனதா கட்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளருமான பாரிவேந்தர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பாரிவேந்தர், மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், எனக்காக லாடபுரம் பேருந்து நிலையம் பகுதியில், தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் போது, அங்கு வந்த திமுக மற்றும் விசிக வை சேர்ந்த சிலர் அவர்களிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு முதுகு, தலை, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசிக.வும் திமுகவினரும் அவர்களது ரவுடித்தனத்தை காட்டி விட்டார்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற அடாவடி செயல்கள் ஏற்புடையதல்ல.
திமுகவும் விசிகவும் கூட்டணி அமைத்து மக்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த போக்கினை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அரசியல் கட்சியாக இருப்பதற்கே அவர்கள் அருகதை அற்றவர்களாகி விடுவார்கள். . நாங்கள் இதை விடப்போவதில்லை தற்போது எங்கள் கட்சியினர் ஆவேசமாக உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் இறங்கினால் இங்கு பணிகள் நடைபெறாது. அது எங்கள் நோக்கமல்ல என்றார். தொடர்ந்து பேசிய பார்வேந்தர் தேர்தல் நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். இந்த சம்பவத்திற்கு அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் போது, இந்திய ஜனநாயக கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.