இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார்

இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருவில்லிபுத்தூர் அருகே பூவாணியில் தலித் இளைஞர் மீது கொடூரமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


திருவில்லிபுத்தூர் அருகே பூவாணியில் தலித் இளைஞர் மீது கொடூரமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே பூவாணியில் தலித் இளைஞர் மீது கொடூர தாக்குதல் சம்மந்தமாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் அர்ஜினன் தலைமையில் மாவட்டகாவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி கிராமம். இங்கு தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை இருந்தது.

எனவே, அடிப்படை வசதி வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து கிராம சபையில் கேள்வி எழுப்புவது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சென்று மனு கொடுப்பது போன்ற மக்கள் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து, அப்பகுதிக்கு குடிநீர், தெரு விளக்கு, சாலை போன்ற பணிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும் அப்பகுதியில், ரேஷன் விநியோகம் செய்வதில் நடந்த முறைகேடுகளிலும் தலையிட்டுள்ளார். இவற்றையெல்லாம் பொறுக்காத நபர்கள் சின்னத்தம்பி உடன் சிறு சிறு தகராறுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, 2முறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பிலும் பேசி சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த கடந்த மே 17 அன்று இரவு சின்னத்தம்பி மற்றும் வினித் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பூவானி சாலையில் வந்துள்ளனர். அப்போது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சாலையை மறித்து காரை நிறுத்தியுள்ளார். மேலும், காரின் விளக்கை மிகவும் ஒளி வீசும் வகையில் வைத்துள்ளார். எனவே, இருவரும் கண் கூசுகிறது என அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், மாரிமுத்து, இருவரையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு தேவையில்லாமல் இவ்வாறு பேசாதீங்க என்று சின்னத்தம்பி கூறியதற்கு அங்கிருந்த தங்க முனியாண்டி என்பவர் சக்கிலிய பயலுக்கு என்னடா திமிரு என்று ஜாதியை கூறி முதுகில் காலால் உதைத்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் விலக்கி விட சின்னத்தம்பி வீட்டிற்கு சென்று விட்டார் அதன் பின்னர், மே18 அன்று காலை சின்னத்தம்பி குடியிருக்கும் அருந்ததியர் காலனிக்குள் மாரிமுத்து குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியைச் சுமார் 20 பேர் சேர்ந்து சின்னத்தம்பி வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மாரிமுத்துவையும் சாதியைச் சொல்லித் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுக்க வந்த அவரது பெற்றோர்களையும் வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது . இதுகுறித்து சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில், சாதி இந்து சமூகத்தை சேர்ந்த மாரிமுத்து உட்பட 7 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், சின்னத்தம்பி மற்றும் அவரது சகோதரர்களான வெற்றி, மாரிமுத்து ஆகிய மூவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் பிணையில் வெளிவர முடியாத 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டு சென்று தாக்கியவரை விட, தாக்குதலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் . தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சனையில் தலையீடு செய்து சின்னத்தம்பி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய மாரிமுத்து உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளை வழக்கில் சேர்ப்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட காவல்துறையானது, இது போன்ற வன்முறை தாக்குதல் நடைபெறாமல் தடுப்பதோடு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் அர்ஜினன் தலைமையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ்கானை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

Tags

Next Story