குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: குழந்தைத் தொழிலாளர் திருத்த சட்டம் 2016ன்படி 14வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும். 14வயது நிறைவடைந்த ஆனால் 18வயது நிறைவடையாத வளர் இளம் பருவத்தினரை இச்சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அபாயகரமான தொழில் தொடர்புடைய பணிகளில் செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறும் பட்சத்தில் ரூ.20,000த்திற்கு குறையாமல் ஆனால் ரூ.50,000த்திற்கு மிகாமல் அபாராதம் அல்லது 6மாதம் முதல் 2ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ 04575-240521 அல்லது 1098என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது