நாமக்கல்லில் நடந்த நதி நீர் இணைப்புத் திட்டம் கருத்தியல் கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல்லில் நடந்த நதி நீர் இணைப்புத் திட்டம் கருத்தியல் கலந்தாய்வு கூட்டம்

நதிநீர் இணைப்பு கூட்டம்

"மேட்டூர் காவேரி உபரி நீர் - சரபங்கா நதி - திருமணிமுத்தாறு' இணைப்புத்திட்டம் குறித்து ஆலோசனை

மேட்டூர் காவேரி உபரி நீர் - சரபங்கா நதி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் கருத்தியல் கலந்தாய்வு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்கத் தலைவர் பி.கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.‌ சமூக ஆர்வலர் வி.சத்யமூர்த்தி மற்றும் டி.எம். காளியண்ணன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் டாக்டர் பி.வி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‌

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், மறைந்த டி.எம்.காளியண்ணன் அய்யா அவர்களின் அரை நூற்றாண்டு கனவுத் திட்டமான "மேட்டூர் காவேரி உபரி நீர் - சரபங்கா நதி - திருமணிமுத்தாறு' இணைப்புத்திட்டம் குறித்து ஆவணப்படம் வெளியிட்டு கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு டாக்டர்.செந்தில் விளக்கிப் பேசுகையில், இத்திட்டம் நிறைவேறினால், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு அது ஒரு யுகப் புரட்சிதான் என்று கூறினார்.

மேலும் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 60,000 ஏக்கர் நிலம் பாசன வசதி மற்றும் முப்போகம் விளைச்சல் பெறும் என்றும், தொழில் வளம் பெருகும் என்றும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து, நீர் இன்மையால் மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய தொழிற்சாலைகளை நாமக்கல் மாவட்டத்தை புறக்கணித்து வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தங்களது ஆலைகளை அமைத்து வருகின்றனர். இதனால் நம் பகுதிக்கு பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

"இந்த நீர்திட்டத்தை நிறைவேற்றும் கட்டாயத்தில் நாம் தற்போது உள்ளோம் என்பதை புரிந்து கொண்டு நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார். சமூக ஆர்வலர் சத்யமூர்த்தி பேசுகையில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை பள்ளி/ கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், அதை குறைந்த செலவில் விஞ்ஞான ரீதியில் சாத்தியம் என்றும் பேசினார்.

தலைவர் வெங்கடாசலம் பேசும் போது, இதுபோன்ற நீர்த்திட்டங்களுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் சித்திக் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், இதர சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story