உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட 7 வாகனங்களில் தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூரில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ் சாலையில் காவல் துறை சோதனை சாவடியில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜா மோகன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப் பட்ட ரூபாய் 1.31லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யபாமா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர் அருகே உள்ள குகன் பாறை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ராஜபாளையம் அருகே உள்ள தொம்பகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி அருண்குமார் (29) என்பவரின் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவண மின்றி எடுத்துச் செல்லப்பட்ட 90,500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு இடங்களில் சோதனைகள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.