நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.7 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள், 8 கடைகளுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் நாளொன்றுக்கு 80 முதல் 85 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி, கடலை உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் கடை வீதிகளில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்த இடங்களில் கூடுதல் கழிவுகள் தேக்கமடைந்தன. இதனால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தலா 120 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இதில் நெகிழிக் கழிவுகள் மட்டும் 10 டன் இருந்தது.இதையடுத்து, மாநகராட்சி அலுவலா்கள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி, செல்வராணி ஆகியோா் தலைமையில், திண்டுக்கல் ஆா்த்தி தியேட்டா் சாலையில் 15 கடைகளில் நடத்திய ஆய்வின்போது, 8 கடைகளில் தடை செய்யப்பட்ட 24 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த 8 கடைகளுக்கும் ரூ. 7ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Tags

Next Story