போக்குவரத்து அலுவலகத்து வரும் வாகனங்களால் நெரிசல்

போக்குவரத்து அலுவலகத்து வரும் வாகனங்களால் நெரிசல்

 போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்  

கும்மிடிப்பூண்டி போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு, வாகன தகுதி சான்று உள்ளிட்ட பணிகளுக்காக வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டார பகுதிகளை சேர்ந்த புதிய வாகனங்களின் பதிவு, வாகன தகுதி சான்று உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பதிவுக்கு வரும் புதிய டூ வீலர்கள் மற்றும் கார்களை நிறுத்த அந்த அலுவலகத்தில் இடவசதி இல்லாததால், அனைத்து வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

மோட்டார் வாகன ஆய்வாளர், அங்கு நிறுத்தப்படும் நுாற்றுக்கணக்கான வாகனங்களின் இன்ஜின் எண், சேஸ் எண் ஆகியவற்றை சரிபார்த்து முடிக்கும் வரை, அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த சாலையில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் தொடர்புடைய பணி என்பதால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கேள்வி ஏதும் கேட்காமல் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், தனி இடம் ஒதுக்கி, சொந்த கட்டடத்தில் போதிய இட வசதியுடன் அந்த அலுவலகத்தை மாற்ற வேண்டும். அதுவரை போக்குவரத்து நெருக்கடி இல்லாத மாற்று இடத்தில் புதிய வாகனங்களின் பதிவு தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story