குவிந்த கூட்டம் - முன்னதாகவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்

குவிந்த கூட்டம் - முன்னதாகவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் 

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்னதாகவே இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபான வகைகள் விற்று தீர்ந்ததையடுத்து முன்கூட்டியே கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் 19- ந்தேதி வரைக்கும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 109 டாஸ்மாக் கடைகளும் நேற்று முதல் மூடபட்டன. தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்ற தகவலை முன்கூட்டியே அறிந்த மதுப்பிரியர்கள் நேற்று முன்தினம் முதலே 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி வைப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு சென்றனர். இதனால் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் சில கடைகளில் ஏற்கனவே மதுபான வகைகள் இருப்பு குறைவாக இருந்த நிலையில் மேலும் மதுபானங்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படாததால் அந்த கடைகளில் முன்னதாகவே இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபான வகை கள் விற்று தீர்ந்ததையடுத்து முன்கூட்டியே கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். அதுமட்டுமின்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கருதி காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பல டாஸ்மாக் கடைகள், வழக்கமாக மூடப்படும் நேரத்திற்கு முன்பாகவே சில மணி நேரத்திற்கு முன்பு மூடப்பட்டதால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் பலர் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

Tags

Next Story