சேதுபாவாசத்திரம் அருகே காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பூக்கொல்லையில் உள்ள வங்கி முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முறையாக அமல்படுத்தாமலும், நூறு நாள் வேலை வழங்காமல் நாட்களை குறைத்து வேலை வழங்குவதை கண்டித்தும், கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் சேக் இப்ராகிம்ஷா கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டார தலைவர் தூண்டி அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கமால்பாட்சா, குருவிக்கரம்பை செல்வராசு, பாலு, சொக்கலிங்கம், மணியன், காதர்சா, கோவிந்தன்,ஞானசேகரன், கணபதி, உடை.அருணாசலம், சம்பத், மருங்கை ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.