மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் தமிழக மீனவர்களை வஞ்சிப்பதை கண்டித்து நாளை ஊட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எம்.எல்.ஏ., கணேசன் ஊட்டியில் பேட்டியளித்தார்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி படகுகளை பறிமுதல் செய்வதும் மீனவர்களை கைது செய்து வருவதும் குறித்து மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்காமல் தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதாகவும், மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்து நாளை தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஊட்டியில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், ஊட்டி சட்டமன்ற உறுப்பினருமான கணேசன் செய்தியாளர்களிடையே பேசுகையில், "தமிழக மீனவர்களை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து நாளை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி ஏ.டி.சி., திடலில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,"என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பா.ஜக.,வில் இணைய இருப்பதாகவும் அதில் எம்.எல்.ஏ., கணேசன் பெயரும் இருப்பதாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், இது போன்ற வதந்திகள் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.