செந்தூர் எக்ஸ்பிரஸ் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிசீலனை
செந்தூர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேற்று ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமான பணிகள், கார் பார்க்கிங், மோட்டார் சைக்கிள் பார்க்கிங், பயணிகள் ஓய்வறை, ரயில்வே பிளாட்பார்ம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மற்றும் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரிய ரயில்வே நிலையங்களுக்கு இணையாக இந்த ரயில்வே நிலையம் அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். இந்த பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மதுரை கோட்ட உதவி வணிக மேலாளர் பாலமுருகன்,
மதுரை கோட்ட சிக்னல் மற்றும் டெலிகாம் என்ஜினியர் பிரசாத், முதன்மை திட்ட அதிகாரி ஸ்ரீஹரிகுமார், உதவி கோட்ட மேலாளர் முத்துகுமார், போக்குவரத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் முருகேசன், திருச்செந்தூர் ரயில்வே நிலைய மேலாளர் சசிகாந்த் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.