ஸ்ரீபெரும்புதுார் மின் மத்திய பண்டக சாலையில் கட்டுமான பொருட்கள் கருகின
தீ விபத்தில் கருகிய பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பென்னலுார் பகுதியில் மின் தொடர் அமைப்பு கழக மத்திய பண்டகசாலை உள்ளது. இங்கு, துணை மின் நிலையம் புதிதாக உருவாக்குவதற்கு உபயோகப்படுத்தும் இன்சுலேட்டர், டிஸ்க், ஜீப்ரா, கண்டக்டர், போன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேமித்து வைத்து,
தமிழகம் முழுதும் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, இந்த வளாகத்தில் உள்ள, உயர் அழுத்த மின் கோபுரத்திலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறை வீரர்கள், பல மணி நேரத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
அதற்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின் நிலையம் அமைக்கும் பொருட்கள் தீயில் கருகின. இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: அலுவலக வளாகத்தில் உள்ள காய்ந்து போன புல் செடிகளால் அடிக்கடி இதுபோன்று தீ விபத்து ஏற்படுகின்றன.
இது போன்ற விபத்துகளை தவிர்க்க முன்கூட்டியே புல் செடிகளை அகற்ற வேண்டும் என, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தோம், இந்த தீ விபத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்துள்ளன. இருப்பினும் கணக்கெடுப்பிற்கு பின், சரியான மதிப்பு தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.