274 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவக்கம்
சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள்
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிதோறும் மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில், மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்பாடு இன்றி, வீணாகி உள்ளன. ஒரு சில ஊராட்சிகளில், முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலாக, 274 ஊராட்சிகளிலும், சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டிக் கொடுப்பதற்கு, ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 131 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு, முதற்கட்டமாக, 4.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. குறிப்பாக, 2.10 லட்சம் ரூபாய் துாய்மை பாரத இயக்கத்திலும், 1.40 லட்சம் ரூபாய், 15வது நிதிக்குழு மானியத்திலும், அந்தந்த ஊராட்சிகளில் இருந்து நிதியை விடுவிக்க, ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அடுத்த நிதி ஆண்டில், எஞ்சியிருக்கும், 143 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சி துறையினர் உத்தேசித்து உள்ளனர்.