போதமலையில் சாலை அமைக்கும் பணி - பிப்.17ல் முதல்வர் துவக்கி வைப்பு

போதமலையில் சாலை அமைக்கும் பணியை வரும்17ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கிவைக்க உள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலையில், கீழூர்,மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கிய கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் இந்து-மலையாளி வகுப்பைச் சார்ந்த 1,727 மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், கீழூர் ஊராட்சிக்கு இது நாள் வரை சீரற்ற மற்றும் கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைபாதையின் வழியாக மலைவாழ் மக்கள் கீழே இறங்கி தங்களின் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு கடும் சிரமத்துடன் மறுபடியும் மேலே ஏறி சென்று கொண்டுள்ளனர்.

தங்களின் அவசர மருத்துவ உதவிக்கு, மூங்கில் கொம்பில் அடர்த்தியான போர்வையை கொண்டு "டோலி" கட்டி தூக்கியபடியே, சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக மலைப்பகுதியில் கீழிறங்கி நடந்து வந்தால்தான் இராசிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் இங்கு வாழும் மக்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களைவை உறுப்பினர் KRN. இராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர்களின் தொடர் முயற்சியால் ரூ.139.654 கோடி மதிப்பில் 31.070 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைபாதையில் சாலை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சரால் அரசானை எண்.104 நாள் 17.08.2023-ன் படி நபார்டு- XXIX திட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டு 27-10-23 அன்று ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் முடிவுசெய்யப்பட்டு 18-12-23 அன்று வேலை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போதமலை அடிவாரப் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் எம்.பி., பேட்டி அளித்தார். அதில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை மலை கிராமத்திற்கு வரும் 17ஆம் தேதி சாலை அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கான் பிரன்ஸ் மூலம் துவக்கி வைக்கிறார். அன்றைய தினம், போதமலை பகுதியில் நடைபெறும் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் விழா நடைபெறும் என்றார். மேலும், போதமலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story