செம்பரம்பாக்கம் கால்வாயில் பாலம் கட்டும் பணி மந்தம்
பாலம் கட்டும் பணி தீவிரம்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 'சிப்காட்' தொழிற்சாலைகளால், ஸ்ரீபெரும்புதுார் முதல் சென்னை துறைமுகம் வரை, வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்தது. வாகன நெரிசலை குறைக்க, இந்த சாலையை நான்கு வழியில் இருந்து ஆறு வழியாக விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில், மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை 23 கி.மீ., துாரத்திற்கு 426 கோடி ரூபாய் மதிப்பில், ஆறுவழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் முக்கிய கால்வாயான பங்காரு கால்வாய் மற்றும் கிருஷ்ணா கால்வாய் குறுக்கே, ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே விரிவாக்கம் செய்து புதிய பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நிறைவுற்ற நிலையில், பாலம் கட்டுமான பணி பல மாதங்களாக மந்தகதியில் நடக்கிறது. கட்டுமான பணிக்காக கால்வாயின் குறுக்கே மண் கொட்டியுள்ளதால், மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. மேலும், பாலம் கட்டுமானம் நடக்கும் இடத்தில் போதிய தடுப்புகள் இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரண்டு பாலம் கட்டுமான பணிகளை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.