மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம்

மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம்

செய்யூரில் மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


செய்யூரில் மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் வரை உள்ள, 110 கி.மீ., நீளமுடைய சாலையின் விரிவாக்க பணி, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை விரிவாக்கத்திற்காக, திட்ட வரைபடத்தின்படி, குடியிருப்புப் பகுதிகள் உள்ள இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் பகுதியில், சாலையில் இருபுறமும், 950 மீட்டர் நீளத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது, மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ள பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி, குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில், குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்காதபடி, கூடுதலாக 900 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்., மாதம் 29ம் தேதி, மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் மற்றும் போளூர் - செய்யூர் சாலை விரிவாக்க கோட்ட பொறியாளர் லட்சுமிநாதனிடம், அப்பகுதிவாசிகள் பேச்சு நடத்தினர். இதில், மக்களின் கோரிக்கையின்படி, மீதம் உள்ள பகுதியில் ஒரு வாரத்தில் அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயார் செய்து, மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என கோட்ட பொறியாளர் லட்சுமிநாதன் தெரிவித்தார். இதையடுத்து, தற்போது 900 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story