கட்டுமான அமைப்பு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கணும்!

ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்றப் பொது நலச் சங்கத்தின் நிர்வாகி கூறினார்.

தமிழ்மாநில கடல் மீன்கள் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்றப் பொது நலச் சங்கத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் மாநில கூட்டமைப்பு தலைவர் சேலம் A. கதிர்வேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றி பேசினார்.

அப்போது, 6 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பிற மாநிலங்களில் வழங்குவது போல தமிழ்நாட்டிலும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்., கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஆண்களுக்கு 58 வயதிலும், பெண்களுக்கு 55 வயதிலும் ஓய்வூதிய ஆணை வழங்கி நிதி வழங்க வேண்டும்.கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது போல அமைப்பு சாரா தொழிலாளர் குழந்தைகளுக்கும் நிதியை உயர்த்தி வழங்க ஆவண செய்ய வேண்டும்.

பொது இ-சேவை மையத்திற்கு கடவுச்சொல் வழங்குவது போல் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில் சங்கங்கள் பதிவு செய்வதற்கு இணையதளத்தில் உள்நுழைய கடவுச்சொல் வழங்கவும் பெருவிரல் ரேகையை வைக்க அனுமதிக்கவும் வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு உடனடியாக நிதி உதவி ரூ. 4.50 இலட்சம் வழங்க வரும் நிதி ஆண்டில் ஆவணம் செய்ய வேண்டும்.பதிவு புதுப்பித்தல், ஓய்வூதியம் போன்ற விண்ணப்பத்திற்கு தொழிற்சங்க பரிந்துரை செய்ய வேண்டும் ஆகிய 6 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ் மாநில கடல் மீன்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் மாநிலத் தலைவர் சேலம் A. கதிர்வேல், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதம் முதல் தொழிலாளர் பதிவுக்கு இணையதளம் 6 மாத காலமாக முடக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு புதுப்பித்தல், உதவித்தொகை பெறுவது, கேட்பு மனு அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாரியம் ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், குறித்த காலத்தில் தொழிலாளர்கள் விவரங்களை சரி செய்து தந்து விடுகிறோம் என நீதிமன்றத்தில் உத்திரவாதம் தெரிவித்த போதிலும், இன்று வரை இணையதளம் முறையாக செயல்படவில்லை. இந்த வாரியத்தில் 72 லட்சம் பேரின் தரவுகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 43 லட்சம் மட்டுமே காணாமல் போய் உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது. எனவே தரவுகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.தொழிலாளர் பதிவிற்கு கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை அவசியம் என்பதை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.

கை விரல் ரேகை மட்டுமே வைத்து தொழிலாளர் பதிவை மேற்கொள்ள வேண்டும்.கட்டுமான தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பாகுபாடு இன்றி அனைத்து 18 நலவாரிய தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் 1200 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இணையதளம் தொடர்பாக தேர்தல் முடிவுக்கு பிறகு சீர்படுத்தப்படவில்லை எனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என கூறினார்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் சேந்தமங்கலம் ஜி.மோகன்ராஜ், மாநில பொதுச் செயலாளர் மேட்டூர் ஆர். ராம் கவுண்டர், தொழிற்சங்க மாநில மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் மாநில கடல் மீன்கள் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற பொது நல சங்கத்தின் நிர்வாகி சேந்தமங்கலம் பரமசிவம் நன்றி கூறினார்.

Tags

Next Story