நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் தீவிரம்
பைல் படம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊரட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் ஜல் - ஜீவன் திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஊராட்சிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் போது, வீணாக கீழே செல்கிறது.
இதனால், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டித்தர வேண்டும் என, கலெக்டர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம், தொடர்ந்து மக்கள் முறையிட்டனர். அதன்பின், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இந்த தொட்டிகளை, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அதன்பின், ஜல் - ஜீவன் திட்டத்தில், 2020 - 21ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு,காட்டாங்கொளத்துார் ஊராட்சியில் 15, திருக்கழுக்குன்றத்தில் நான்கு, திருப்போரூர் ஊராட்சியில், 25, புனிததோமையார்மலை ஊராட்சியில், 28 என, மொத்தம் 79 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட, 12.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2022- 23ம் ஆண்டில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களில், 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, 6 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், எட்டு ஒன்றியங்களில், 49 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட 9 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், 88 மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் கட்டும் பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது, 49 மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மற்ற நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 49 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் முடிந்து, தண்ணீர் ஏற்றி சோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன் பயன்பாட்டிற்கு வரும். மற்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.