சிதம்பரத்தில் வீடுகளை இழந்தவர்களின் ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் வீடுகளை இழந்தவர்களின் ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நீர்வழி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சிதம்பரம் நகரத்தில் உள்ள தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாச குளம், நாகச்சேரி குளம், 33வது வார்டு அம்பேத்கர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில் தில்லையம்மன் ஓடையில் வீடுகள் ஆக்கிரமிப்பு என இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது அரசு சார்பில் வெளிவட்ட சாலை ரூ. 40 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்தோர் மாற்று இடம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே, மாற்று குடியிருப்புகளை பெறுவது குறித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வீடுகளை இழந்தவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கமேஸ்வரன், சின்னையன், அஷ்ரப்அலி, மல்லிகா, அமுதா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வீடுகள் இழந்தவர்களுக்கு அரசிடமிருந்து மாற்று குடியிருப்புகள் பெறுவது குறித்து பேசினர். ' மேலும் சிதம்பரம் நகரத்தில் 600-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வில்லை. எனவே சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை ஜூலை 16-ஆம் தேதி முற்றுகையிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, கஞ்சி காய்ச்சி குடிப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story