மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் !
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி கூட்டத்தில் பேசினார். அப்போது ஆட்சியர் பேசுகையில்,"வேலூர் மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. முகாமிற்கு அதிக அளவில் பொதுமக்கள் வரக்கூடும். எனவே காவல்துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முகாமிலும் உதவி மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதிகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும். குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமை அணுகுவதற்கு ஏதுவாக சாய்தள வசதி, சக்கர நாற்காலி ஆகியவை இருக்க வேண்டும்.சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம், காய்ச்சல் முகாம் அமைக்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். 15 துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். அவர்களிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்," என கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.