தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் நிறுவன உரிமையாளருடன் நடைபெற்றது
தனியார் நிறுவன உரிமையாளருடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையமானது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் 2024-க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 16.03.2024 முதல் தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்திட பேருதவி புரிகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம், தொழில் செய்பவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அச்சக உரிமையாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய விவரங்கள்:

1. மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏ ன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2. தேர்தல் சமயங்களில் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். 3. அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். 4. அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன், ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட நீதிபதி /மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும். 5. அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும்.

6. அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாது. 7. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 மீறி செய்படும் எந்த ஒரு அச்சக உரிமையாளர் மீதும் ஆறு மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்பட வாய்புள்ளது.

கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்

1. தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை பிரித்துக்கொள்ள வேண்டும். 2. அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 3. நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்கக் கூடாது. 4. அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும்.

5. தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் 6. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. 7. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை. 8. தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு மொய் என்ற பெயரில் பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்புள்ளது. அவ்வாறான இனங்கள் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

9. திருமண மண்டபங்களில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். 10. வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. 11. மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்:

1. தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். 2. வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. 3. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும். மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வட்டிக்கு விடுவோர் நகை அடகுதொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்

1. எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும் 2. வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது 3. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது

4. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைளும் வெளிப்படை தன்மையுடனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்சொன்ன விதிமுறைகளின் படி மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும் சுமூகமாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறும், நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story