பண பரிமாற்றம் கண்காணித்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வங்கிகளின் மூலம் பண பரிமாற்றம் கண்காணித்தல் குறித்து வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் இன்று (18.03.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 33.தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வங்கிகளில் சந்தேகத்திற்கு இடமாக எவரேனும் ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலோ, கடந்த இரண்டு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் செலுத்தினாலோ, RTGS மூலம் ஒரு வங்கி கணக்கிலிருந்து பிற மாவட்டம், பிற தொகுதியிலுள்ள பல நபர்களுக்கு பண பரிமாற்றம் செய்தாலோ,
வெளிநாட்டு பணத்தை மாற்றினாலோ அல்லது கண்டறியப்பட்டாலோ, ஒரு நபர் பல நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தாலோ, ஒரு இலட்சத்திற்கு மிகையான தொகையினை வேட்பாளரது உறுதி மொழி படிவத்தில் குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது அவரை சார்ந்தவர்கள் பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, அரசியல் கட்சியினர் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு இலட்சத்திற்கு மிகையான பணத்தினை பரிமாற்றம் செய்தாலோ,
தினசரி அறிக்கையாக அனைத்து வங்கிகளும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிக்கை அளித்திட வேண்டும். வேட்பாளர்கள் கணக்கு துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தனியாக தனி வரிசை திறந்து வைத்திருக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு பணம் எடுத்தல் மற்றும் செலுத்தல் சமயங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
வங்கிகள் ரொக்கப் பணத்தை தங்களது கிளைகளுக்கு எடுத்துச் செல்லும் போது வங்கிக்கான பணம் என்பதற்கான சான்றினை கொண்டு செல்ல வேண்டும். பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உள்ள பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும். தேர்தல் அலுவலர்களுக்கு வாகன பரிசோதனையின் போது அதற்குரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட வங்கி ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.