அச்சகம், உணவகம் மற்றும் தனியார் மண்டபங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அச்சகம், உணவகம் மற்றும் தனியார் மண்டபங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் இன்று (18.03.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை அச்சடிக்கும் போது, இந்திய இறையாண்மைக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராகவும், ஜாதி, மதம், இனம் போன்றவற்றின் ஒற்றுமையை குழைக்கும் வண்ணம் வாசகங்கள், அறிக்கையில் இடம்பெறக்கூடாது.
அச்சடிப்பவரின் உரிய அனுமதிக் கடிதம் பெற்று, அதற்குரிய பட்டியலுடன் பிரதிகளின் எண்ணிக்கை, அச்சிடப்படும் மாதிரி பிரதியினை அச்சடிக்கும் நிறுவனம் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் (MCMC Committee) சமர்பித்து, அச்சிடுவதற்கான அனுமதியினை பெற்று, உதவி தேர்தல் அலுவலரிடம் சமர்பித்து அச்சிட்டு வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
துண்டு பிரசுரங்களின் முகப்பு பகுதியில் அச்சாளரின் முகவரி, பிரதிகளின் எண்ணிக்கை, அனுமதி எண் ஆகியவை தெளிவாக தெரியும் வகையில் அச்சிடிப்பட வேண்டும். அச்சிட்டு வெளியிடுபவரின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் எந்த நிறுவனமும் அச்சிடக்கூடாது என தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை உணவங்களிலிருந்து தேர்தல் தொடர்பான பணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்கள்,
கேரியல் உணவுகள் மற்றும் பிற ஆர்டர்களுக்கு வழங்கிய பட்டியல் அந்த பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்க வேண்டும். தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகளில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் கூட்டங்கள் நடைபெறும் பொழுது உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்த உரிய தகவலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே திருமண மண்டபங்களில் திருமணங்கள் மற்றும் வேறு நிகழ்ச்சிகள் குறித்த முன்பதிவு விபரங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறைக்கு அளித்திட வேண்டும்.
திருமண மண்டபம், தனியார் தங்கும் விடுதிகளில் வெளிநபர்கள் தங்கும் விபரங்களை பதிவேடுகளில் விடுதலின்றி பதிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் கூட்டங்கள் முழுவதுமாக வீடியோ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி தங்களது நிறுவனங்கள் மீது புகார்கள் எழாத வகையில் தேர்தலை நியாயமாகவும்,
நேர்மையாகவும் நடத்திட அச்சகம் மற்றும் தனியார் மண்டபங்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.