மக்களுடன் முதல்வர் சிறப்பு குறைதீா் முகாம் குறித்து ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ‘மக்களுடன் முதல்வா்’ என்ற சிறப்பு குறைதீா் முகாமில் பணியாற்றும் அலுவலா்கள், கணினி உதவியாளா்கள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாம் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூா் பேரூராட்சி, சாத்தான்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் டிச. 11-29 வரை நடைபெறவுள்ளது. பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பணியாற்ற உள்ள இம்முகாமில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் பங்கேற்க 58 உதவி ஆய்வாளா்கள், 46 கணினி விவர உதவியாளா்கள் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, சிறப்பு அலுவலா்கள், கணிணி விவர உதவியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்டுள்ள சேவைகளுக்கான மனுக்களை பெற்று ‘சிஎம் ஹெல்ப் லைன்’ இணையத்தில் பதிவேற்றம் செய்வது, முகாமில் அவா்களது பணிகள் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினாா்.
இதில், சைபா் குற்றப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உன்னி கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ், அமைச்சுப்பணி உதவியாளா் மரிய அந்தோணி சகிலா உள்ளிட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.