உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் - ஆட்சியா் தகவல்
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் சனவரி 7 மற்றும் 8 ஆகிய நாள்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்தவுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாகக்கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதிவாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
விண்வெளி தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாக செயல்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன்மூலம் வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும். மேலும் இம்முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றை சாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 09.12.2023 முற்பகல் 10.00 மணியளவில் ராயல் மஹால், கோஸ்டல் ரெசிடென்சியில் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொள்கிறார்.